தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?; மதுரை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?; மதுரை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
Published on

மதுரை,

கரூரில் உள்ள ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவின்போது, பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு தேர் வருவதில்லை என்றும், இந்த ஆண்டு விழாக் குழுவிடம் முறையிட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், "ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு" என்று பதில் அளித்தனர்.

அப்போது எதிர் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதற்கு நீதிபதிகள், "பட்டியலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதி இல்லை என பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்கள்? பதில் மனுத் தாக்கல் செய்கிறேன் என்ற பெயரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்துக் கிடப்பில் போடுவீர்கள். அதுவரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?" எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், கரூர் மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக் குழு உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com