

சென்னை,
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், அதற்கான இலட்சினையையும் (லோகோ) அவர் வெளியிட்டார். அதை அவரிடம் இருந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவர் பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வாகனங்களின் அணிவகுப்பும் நடந்தது. ஒரு ரோந்து வாகனத்தில் ஏறி, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இயக்கி பார்த்தார்.
இந்த நிலையில் சிங்கப்பெண் அதிரடிப்படை ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர், தம்பி விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.