பழனி முருகன் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வந்து சிங்கப்பூர் மந்திரி சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் வந்து சிங்கப்பூர் மந்திரி சாமி தரிசனம்
Published on

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்ட மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகம் நேற்று தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பழனிக்கு வந்தார். அவரது ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பிரத்யேகமாக 'ஹெலிபேட்' அமைக்கப்பட்டு இருந்தது.

அங்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகத்துக்கு, போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கார் மூலம் பழனி அடிவாரம் சென்றார். பின்பு அங்கிருந்து ரோப்கார் வழியாக பழனி மலைக்கோவிலுக்கு சென்றார். கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தின் போது கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உடன் இருந்தார்.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில், மந்திரி காசி விஸ்வநாதன் சண்முகத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனம் முடித்து விட்டு அடிவாரம் வந்தார். அங்கு இருந்து 'ஹெலிபேட்' அமைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு காரில் சென்றார். பின்பு ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு அவர் புறப்பட்டு சென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com