

சென்னை,
சென்னை ஜாபர்கான்பேட்டையில் 6 மாதமே ஆன வளர்ப்பு பூனை மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தனது வீட்டில் பிறந்து 6 மாதங்களே ஆன அழகான பூனை ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று அந்த பூனை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்தசாரதி கதறி அழுதார். ஆரோக்கியமாக இருந்த பூனை திடீரென இறந்தது அவருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தனது பூனைக்கு அந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டதாக பார்த்தசாரதி குற்றம் சாட்டினார். மேலும், வாயில்லா ஜீவனை கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் அவர் பரபரப்பு புகார் அளித்தார்.
புகாரை பெற்று கொண்ட போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான பூனையின் உடலை கைப்பற்றினர். பின்னர், பூனையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய, அதன் உடலை பிரேத பரிசோதனை சைதாப்பேட்டையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பூனைக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.