குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம்: மகிஷனை வதம் செய்த முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

முத்தாரம்மன் கோவில் விழாவின் இறுதி நாளான நாளை மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபி ஷேகம், புஸ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
குலசேகரன்பட்டினம் சூரசம்ஹாரம்: மகிஷனை வதம் செய்த முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முத்தாரம்மன்
Published on: 

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூர சம்ஹாரம் நேற்று நள்ளிரவில் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு அடுத்தபடியாக குலசையில் தான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

கொடியேற்றம்

கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, பல் வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் பக்தர்கள் காளி பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர். இதேபோல் ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று காணிக்கைகளை வசூலித்தனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் நாளான நேற்று நள்ளிரவு நடைபெற் றது. இதையொட்டி காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பக்தர்கள்

கனமழை

இதனிடையே குலசை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும், காளிவேடம் அணிந்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். இதனால் கோவில் முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்தது.

சிறப்பு அலங்கார பூஜை

தொடர்ந்து இரவு 10 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டு பட் டர் அய்யப்பன் சூரனை வதம் செய்யும் சூலாயுதத்துடன் மண்டகபடி மண்டபத்திற்கு வந்தார்.

அங்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து முத்தாரம்மன் இரவு 12 மணிக்கு கடற்கரையில் சூரனை வதம் செய்ய புறப்பட்டுள்ளார்.

மகிஷாசூரன் 3 முறை சுற்றி வந்தான்

முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.

எருமை அவதாரம்

இதனால் எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே சாந்தா பிஷேக ஆராதனையும் நடந்தது.

மிதவை தடுப்புகள்

தசரா திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினத்தில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது.

நாளை திருவிழா நிறைவு பெறுகிறது

விழாவில் இன்று காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிக்கு கோவிலை வந்தடைந்ததும் கொடி இறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு களைந்து தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான நாளை மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபி ஷேகம், புஸ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com