சோத்துப்பாறை அணையை திறந்து விட்ட தவெகவினரை கைது செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அணையைத் திறக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

சோத்துப்பாறை அணையை திறந்து விட்ட தவெகவினரை கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அப்பகுதி தவெக நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு, அதை ரீல்சாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டிய அணைகளுக்குள் கூட ஆளும்கட்சியினர் சட்டவிரோதமாக நுழைந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

அணைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அணைகளில் உள்ள நீர் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும். அணைகளில் அளவுக்கு அதிகமாக நீர் உள்ள நேரத்தில் அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், 2015-ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் அணை திறக்கப்பட்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது போலவும், 2025-ம் ஆண்டில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது போலவும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்த எந்த கவலையும், அக்கறையும் இல்லாமல் அணையை தவெகவினர் எவ்வாறு திறந்தனர்; அவர்கள் அணையைத் திறக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பன உள்ளிட்ட வினாக்கள் எழுகின்றன. இவற்றுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும்.

காவல் நிலையம், மருத்துவமனைகளில் நள்ளிரவில் ஆய்வு, புலியைத் துரத்துதல், அணையைத் திறத்தல் என அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை தங்களின் விருப்பம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய விதிமீறல்களுக்காக இதுவரை எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

சோத்துப்பாறை அணைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தண்ணீரைத் திறந்து விட்ட தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X