

நாகர்கோவில்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் விட்டு விட்டு சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. புத்தேரி, கோட்டாறு, இடலாக்குடி மற்றும் வடசேரி பகுதிகளில் அதிகாலையில் கனமழை கொட்டித்தீர்த்தது.நாகர்கோவிலில் அதிகபட்சமாக 22.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும், விடுமுறை தினமான இன்று திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அங்கு நிலவும் ரம்மியமான சூழலில், அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். இதேபோல் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, குளச்சல், தக்கலை, இரணியல், குருந்தன்கோடு, விளவங்கோடு, சுருளோடு, குழித்துறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவுகிறது.மழையின் காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 29.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 785 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 240 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 46.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 633 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான முக்கடல் அணையின் நீர்மட்டம், கடந்த சில மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வந்தது. தற்போது கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இன்று காலை அணை நீர்மட்டம் மைனஸ் 13.40 அடியாக உள்ளது. முக்கடல் அணையில் நீர் பெருகி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள பாசனக் குளங்களிலும் தண்ணீர் பெருகத் தொடங்கியுள்ளது. குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சாகுபடி பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள், மற்ற இடங்களிலும் நடவு பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.