

நெல்லை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில், இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் த.வெ.க. வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் 69,556 வாக்குகள் பெற்று, 12,216 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார். அதே சமயம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவு 57,340 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாலகிருஷ்ணன் 52,084 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கிரிஜா தாமரைப்பாண்டியன் 15,272 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.