வார இறுதி நாட்கள், முகூர்த்தத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள், முகூர்த்தத்தை முன்னிட்டு  சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Published on: 

சென்னை,

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்தத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பேருந்துகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

27/11/2026 (வெள்ளிக்கிழமை) 28/11/2026 (சனிக்கிழமை) மற்றும் 29/11/2026 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27/11/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 696 பேருந்துகளும் 28/11/2026 (சனிக்கிழமை) அன்று 540 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டிலிருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27/11/2026 வெள்ளிக்கிழமை அன்று 65 பேருந்துகளும், 28/11/2026 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து

மாதவரத்திலிருந்து 27/11/2026 மற்றும் 28/11/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 29/11/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 740 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க

இந்நிலையில் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,917 பயணிகளும். சனிக்கிழமை அன்று 3,995 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,613 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App. IOS. WhatsApp No: 9444018898, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மையம் (SETC Counter) மற்றும் KIOSK Machine மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X