சென்னையில் போக்குவரத்து விதிமீறல்அபராதம் குறித்த தகவல்களைப் பெற 15 இடங்களில் சிறப்பு மையங்கள்

அழைப்பு மையங்கள் வரும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட உள்ளன.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்அபராதம் குறித்த தகவல்களைப் பெற 15 இடங்களில் சிறப்பு மையங்கள்
Published on

சென்னை,

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு இ-சலான்(E-Challan) மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. நேரடியாக வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு அபராதம் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இது போன்ற மெசேஜ்கள் மூலமாக சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு ஏதேனும் மெசேஜ் வந்தால், அதில் உள்ள லிங்க் போன்றவற்றை தொட்டு உள்ளே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், மோசடி குறித்த பயம் காரணமாக காவல்துறை சார்பில் அனுப்பப்படும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் தொடர்பான மெசேஜ்களையும் பலர் பார்க்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அபராதத்தை செலுத்தாமல் பலர் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை தவிர்க்கும் வகையில், அபராதம் குறித்த தகவல்களை பெறுவதற்காக சென்னை காவல்துறை சார்பில் சிறப்பு மையங்களை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு அபராத தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை நேரடியாக அந்த மையங்களுக்கு சென்று தெரிந்து கொண்டு அபராதத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஒரு மையம் என்ற அடிப்படையில் மொத்தம் 15 சிறப்பு அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு மையங்கள் வரும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com