

சென்னை,
ஆணவப் படுகொலையை தடுக்க விரைவில் சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சா் வன்னி அரசு அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் நேற்று (27.08.2026) அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சாதி கடந்து கலப்புத் திருமணங்கள் (சாதிமறுப்பு திருமணங்கள்) செய்துகொள்வோர், சாதி கடந்து காதலிப்போர் தாக்கப்படுவதும் கொடூரமாக கொலை செய்யப்படுவதும் இன்றைய நாகரீக சமூகத்திலும் தொடர்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
தனது வாழ்க்கை இணையரை தேர்ந்தெடுப்பதும், இணைந்து வாழ்வதும் ஒவ்வொரு தனிநபருக்கும் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான உரிமையாகும். அந்த உரிமையை மதிக்காமல் மீறுவதும், தனிநபர் உரிமைகளில் தலையிடுவதும் மனித உரிமை மீறலாகும்.
சாதி ஆதிக்க மனநிலையும், இந்திய மக்களின் மனங்களில் இன்றளவும் ஆதிக்கம் செலுத்தும் சனாதனதர்ம முற்போக்குக் கோட்பாடுகளும், சாதி கடந்த புறமனத்திருமணங்களை சகித்துக் கொள்ள முடியாத நிலையை உருவாக்குகின்றன. இதன் கோர வடிவமாக, சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறுகின்றன.
இத்தகைய படுகொலைகளை தடுப்பதும், கலப்புமணம் செய்து கொள்வோரை பாதுகாப்பதும் ஜனநாயகக் கடமையாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு, சாதியற்ற சமூகத்தை படைப்பதற்கு கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்திட வேண்டும். கலப்புமணம் புரிவோருக்கு எதிரான வன்முறைகளை தடுத்திட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டே வலியுறுத்தியுள்ளது.
கலப்புத் திருமணங்கள் மட்டுமே சாதியற்ற, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதில் அண்ணல் அம்பேத்கர் மிக உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். "சாதியை ஒழிக்கும் வழி" (Annihilation of Caste) என்ற தனது புகழ்பெற்ற நூலில் இதை வலியுறுத்தியுள்ளார். "ரத்தக் கலப்பே நாம் அனைவரும் ஒன்றே என்ற மனநிலையை உருவாக்கும்" என டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார்.
அந்த வகையில் கலப்பு மணங்களை ஊக்கப்படுத்துவதும், சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதும் அவசியமாகும். சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வருவது வரவேற்பிற்குரியது. பாராட்டுக்குரியது . இந்தச் சட்டத்தை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
கலப்புத் திருமணம் புரிந்து கொண்டோரின் சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும். கலப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கும் முயல வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.