வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: அரசியல் கட்சிகளுடன் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தலின்போது, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்:  அரசியல் கட்சிகளுடன் மாநகராட்சி ஆணையர்  தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ் சமீரன்
Published on: 

சென்னை,

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகளை சீரமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஆலோசனைக் கூட்டம்

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ் சமீரன், தலைமையில், 01.01.2027-ஐ தகுதி நாளாக கொண்டு சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (SSR) மற்றும் வாக்குச்சாவடிகளை சீரமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம்

01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு (Rationalisation of Polling Stations) தொடர்பாக, வாக்குச்சாவடிகளைப் பிரித்தல், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் உள்ள பகுதிகளை சீரமைத்தல், வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் மற்றும் வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைத்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ் சமீரன், தலைமையில், இன்று (26.10.2026) ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடைபெற்றது.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

மேலும், இக்கூட்டத்தில், சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் அட்டவணை மற்றும் நடைமுறை பற்றி விரிவாக விளக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையத்திற்கும் ஒரு வாக்குச்சாவடி நிலை முகவரை நியமிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2027ன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அட்டவணை தொடர்பாக விளக்கக் காட்சி கூட்டத்தின் போது காண்பிக்கப்பட்டது.

4,071 வாக்குச்சாவடிகள்

சென்னை மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தலின்போது, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்த பின்னர் 4,071 வாக்குச்சாவடிகளாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள்

வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்யும் வரைவு பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / இணை ஆணையாளர் (கல்வி) கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பூஷ்ணாதேவி மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய தேசிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com