தேனியில் போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் உயிரிழப்பு

காவல் அதிகாரியே அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
தேனியில்  போதை கும்பலால் தாக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் உயிரிழப்பு
Published on: 

தேனி சமதர்மபுரம் அருகே மதுபோதை கும்பலால் நேற்று தாக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி சமதர்மபுரம் பகுதியில் நேற்று போதையில் இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துள்ளனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், அவ்வழியாக வந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இதனை கேட்காமல் தொடர்ந்து அந்த கும்பல் பட்டாசு வெடித்துள்ளது. எச்சரிக்கையை மீறி இடையூறு செய்த இளைஞர்களை செல்போனில் எஸ்.எஸ்.ஐ வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

போலீசார் குவிப்பு

இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் கும்பல், எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், வரும் வழியிலேயே செந்தில் குமார் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செந்தில் குமார் உயிரிழந்ததையடுத்து இரவோடு இரவாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

4 பேர் கைது

தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் கவுதம் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பறிமுதல் செய்த போலீசார், போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யைத் தாக்கிய கும்பல் குறித்து விசாரித்து வருகிறார்கள். முதல் கட்டமாக 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவல் அதிகாரியே அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

X