கார்த்திகை தீபத் திருவிழா: தாம்பரம், செங்கோட்டை, திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரெயில்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தாம்பரம், செங்கோட்டை, திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாம்பரம் - திருவண்ணாமலை

தாம்பரத்தில் இருந்து நவம்பர் 23-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06017) மறுநாள் காலை 4.40 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 24-ந்தேதி (செவ்வாய்கிழமை) இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06018) மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

21 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

செங்கோட்டை - திருவண்ணாமலை

இதேபோல், செங்கோட்டையில் இருந்து நவம்பர் 23-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06071) மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 24-ந்தேதி (செவ்வாய்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06072) மறுநாள் காலை 10 மணிக்கு தென்காசியை சென்றடைகிறது.

19 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சி - வேலூர்

மேலும், திருச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூர் கண்டோன்மெண்டுக்கு நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு சிறப்பு ரெயில் (06127) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் அன்று மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06128) மறுநாள் காலை 7.20 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது.

முன்பதிவு நாளை தொடக்கம்

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர் (கடலூர்), பண்ருட்டி, விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 21) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X