

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்களும், சிறுவர்களும் பெருமளவில் மது மற்றும் போதைக்கு ஆளாகியுள்ள நிலையில், அந்த தீய வழக்கங்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்க மரபுகளைக் கடந்த வழிமுறைகளையும் பின்பற்றியாக வேண்டும். மது, போதைப் பொருள்களை ஒழிப்பது மரபு சார்ந்த முறை என்றால், போதைப் பொருள்களில் பக்கம் இளைஞர்களின் கவனம் திரும்பாமல், ஆக்கப்பூர்வமான வழிகளில் அவர்களின் சக்தியை மடைமாற்றுவது தான் மரபுகளைக் கடந்த வழியாகும்.
தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது போதைக் கலாச்சாரம் தான். மதுவில் தொடங்கி கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் கிடைக்கின்றன. பல இடங்களில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் போதையில் தள்ளாடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும் போதைக் கலாச்சாரம் தான் முக்கியக் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசின் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போதைப் பொருள்களின் வாடையே இளைஞர்கள் மற்றும் சிறுவர்களைத் தீண்டாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
வெறுமையான மனமே தீய எண்ணங்கள் எனும் சாத்தானின் புகலிடம் என்பது உடல் உழைப்பற்ற நிலைக்கும் பொருந்தும். விளையாட்டின் மீது ஒரு சிறுவனுக்கு ஈடுபாடு ஏற்பட்டு விட்டால், அவன் மனம் எந்த தீமைகளையும் நாடாது; விளையாட்டின் மீதும், வெற்றிகள் மீதும் தான் அவனது கவனம் குவியுமே தவிர உடலையும், மனதையும் கெடுக்கும் எந்த விஷயத்தின் மீதும் திரும்பாது. அதுமட்டுமின்றி விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவோரின் மனமும், சிந்தனையும் தெளிவாக இருக்கும். கல்வி வளர்ச்சிக்கும், தொழில் சார்ந்த திட்டங்களை வகுப்பதற்கும் அது வழிவகுக்கும். அது தான் விளையாட்டின் சிறப்பாகும்.
ஆனால், அண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதுமே விளையாடுவதற்கான வாய்ப்புகள் வேகமாக குறைந்து வருகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து கிராமங்களிலும், நகரப்பகுதிகளிலும் சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கு காலியிடங்கள் இருந்தன. ஆனால், வணிக, பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அவை கான்க்ரீட் கட்டுமானங்களாக மாறி விட்டன. அதனால், சிறுவர்களும், இளைஞர்களும் விரும்பினாலும் கூட விளையாட போதுமான, பொருத்தமான இடங்கள் இல்லை. விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறுவர்களும், இளைஞர்களும் ஈடுபடாத பட்சத்தில் அவர்களின் கவனம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் மீது திரும்பி விடக்கூடும். தமிழகத்தின் பல பகுதிகளில் இது தான் நடக்கிறது.
தமிழ்நாடு முழுவதுமே சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விளையாட்டின் மீது தீவிர ஆர்வம் உள்ளது. ஆனால், அதற்கான வாய்ப்பும், வசதிகளும் தான் இல்லை. அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அங்குள்ள மக்களை நான் சந்தித்து பேசினேன். அப்போது ஒரு சிறுவன் கிரிக்கெட் மட்டை வேண்டும் என்று கேட்டான். கிட்டத்தட்ட அனைத்து சிறுவர்களின் எண்ணமும், எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால், அதை பல ஆண்டுகளாக அரசு நிறைவேற்றவில்லை.
அரசு பள்ளிகளில் விளையாட்டு என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பாடத்திட்டத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. ஆனால், இப்போது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களே இல்லாத நிலையில் அவர்களுக்கு விளையாட்டுகளைக் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் இல்லை. உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டுக்கான பாடவேளைகளையும் பிற பாடங்களின் ஆசிரியர்கள் பாடம் நடத்த எடுத்துக் கொள்வதால் மாணவர்களால் விளையாட முடிவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மன அழுத்தம் என்ற வார்த்தை மாணவர்களால் அறியப்படாத ஒன்றாக இருந்தது. அதற்கு காரணம் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடியதும், விளையாடி முடித்த பின் தங்களின் பிரச்சினைகள் குறித்து நண்பர்களிடம் மனம் விட்டு பேசி தெளிவு பெற்றதும் தான்.
இளைய சமுதாயத்தை மீண்டும் சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல சிறந்த தீர்வு விளையாட்டு தான். இதைக் கருத்தில் கொண்டு அனைத்து கிராமங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் விளையாட்டு ஊக்கு விக்கப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் தற்காலிகமாகவாவது விளையாட்டுத் திடல்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்; சிறுவர்களும், இளைஞர்களும் அதில் விளையாட விளையாட்டுக் கருவிகள் வாங்கித் தரப்பட வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு பாட வேளைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ஆண்டுக்கு ஒருமுறை வட்ட, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.