

கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக, குறுகிய காலப் பயிரான பீன்ஸ் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதியில் தேயிலை பிரதான தொழிலாக இருந்தாலும், ஏராளமான விவசாயிகள் காய்கறி விவசாயத்தையும் நம்பியுள்ளனர்.
தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை, விதை, உரம் மற்றும் இடுபொருட்களின் கடுமையான விலை ஏற்றம் போன்ற காரணங்களால் விவசாயம் செய்ய பெரும் செலவு ஏற்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று இந்த காய்கறி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மலை காய்கறிகளுக்கு கடந்த சில மாதங்களாக காய்கறி மண்டிகளில் கொள்முதல் விலை நிலையாக உள்ளது. மேலும் இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக உள்ளது. இந்நிலையில் கொடி பீன்ஸ் விலை கிலோவுக்கு 90 ரூபாய் வரை கிடைக்கிறது. மேலும் முத்திய அவரை (சோடகை) கிலோ 140 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருவ தால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கொடி பீன்ஸ் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது விவசாயிகள் பயிரிட்டுள்ள பீன்ஸ் தோட்டங்களில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இவை இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும்.