

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அடுத்த அருங்குன்றம் பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த அரிய வகை நட்சத்திர ஆமையை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அருங்குன்றம் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வழக்கம்போல் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதர் மறைவில் விசித்திரமான ஆமை ஒன்று நகர்ந்து செல்வதை கண்டு அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அதன் ஓட்டின் மீது நட்சத்திர வடிவிலான புள்ளிகள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தனர்.
அது அரிய வகை ‘நட்சத்திர ஆமை’ என்பதை உணர்ந்த கிராம மக்கள், அதனை பத்திரமாக மீட்டனர். பின்னர், இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் அந்த நட்சத்திர ஆமையை ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட நட்சத்திர ஆமையை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.