சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம்: மாநில தேர்தல் ஆணையம் திறமையற்ற ஆணையமாக உள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி

உள்ளாட்சி தேர்தல் குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்பதாகவும், தமிழக மாநில தேர்தல் ஆணையம் குழப்பமான, திறமையற்ற ஆணையமாக உள்ளது என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம்: மாநில தேர்தல் ஆணையம் திறமையற்ற ஆணையமாக உள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி
Published on

சென்னை,

அம்பேத்கரின் 63-வது நினைவு தினத்தையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக பொறுப்பாளர்களும் தேசிய செயலாளர்களுமான சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., எஸ்.சி.பிரிவு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சி ராணி, மாவட்டத் தலைவர் கே.வீரபாண்டியன் மற்றும் நாஞ்சில் பிரசாத், எஸ்.கே.நவாஸ் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர், கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கூட்டணி தலைமையான தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று உள்ளாட்சி தேர்தல் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், தவறான தேர்தலை நடத்தக்கூடாது என்று விளக்கி கூறினார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு இல்லாமல், மறைமுகத் தேர்தல், ஒரே தேர்தலை 2 கட்டமாக நடத்துவது போன்றவைகள் தேவையில்லை என்ற கருத்து உருக்கள் கோர்ட்டில் வைக்கப்பட்டது.

கோர்ட்டு அவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, எல்லோருக்குமான இடஒதுக்கீட்டையும் மறுவரையறை செய்து, முறையான தேர்தலை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று கோர்ட்டு இந்த தீர்ப்பை சொல்லி இருக்கிறது. எனவே இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

தமிழக மாநில தேர்தல் ஆணையம் குழப்பமான, திறமையற்ற ஆணையமாக உள்ளது. தமிழகத்தின் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் தேர்தல் நடத்தி காட்டியது இந்திய தேர்தல் ஆணையம். அதற்கான ஆக்கப்பூர்வமான சக்தி நமக்கு உண்டு. அமெரிக்காவை விட இந்தியாவில் தேர்தல் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் நடத்தப்படும். தேர்தல் முடிவுகளும் உடனடியாக தெரிவிக்கப்படும்.

அந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் இருக்கும் போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு வேண்டிய ஒருவர் தேர்தல் ஆணையராக வரவேண்டும் என்பதற்காக திறமையற்ற ஒருவரை நியமித்ததன் காரணமாக உள்ளாட்சி தேர்தலையே 2 கட்டமாக நடத்துவது என்று முடிவு செய்து இடஒதுக்கீட்டை சரியாக கணக்கிடாமல் இன்று கோர்ட்டில் குட்டு வாங்கி இருக்கிறார்கள். இது தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு. எனவே நேர்மையான திறமையானவர்களை தேர்தல் ஆணையாளர்களாக தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

தெலுங்கானா பெண் (டாக்டர் பிரியங்கா), நிர்பயா கற்பழிப்பு சம்பவங்களில் அரசியல் கிடையாது. ஆனால், பொள்ளாச்சி சம்பவத்தில் அரசியல் இருக்கிறது. ஆளும் கட்சியின் கைவரிசை இருக்கிறது. ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் அதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே பொள்ளாட்சி சம்பவத்தை அடக்கி வாசிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com