மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்..!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்..!
Published on

சென்னை,

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

தமிழகத்துக்கு மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது. அதாவது, தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ரமேஷ் ஆகியோரிடம் வேட்புமனுக்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். மேலும் திமுக கூட்டணி சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர்களான கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு அளிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com