

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம். அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தினை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்படி கோவிலுக்கு சொந்தமான நிலத்தினை குத்தகைக்கு எடுத்த நம்பிராஜ் என்பவர் குத்தகை ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சட்ட விதிகளுக்கு புறம்பாக கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி அவற்றைச் சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விட்டுள்ளதாகத் தெரியவந்தது. இதன்மூலம் கோவிலின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டது தொடர்பாகப் புகார்கள் எழுந்தன.
இவ்விவகாரம் அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டவுடன், உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் குத்தகை நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டதைக் கருத்தில்கொண்டு, அவருக்கான குத்தகையை ரத்து செய்தும் மேற்படி சொத்தினை கோவில் வசம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 02.11.2026 அன்று அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவின்படி, கூடுதல் ஆணையர் ரத்னாவின் தலைமையில், நில அளவையர்களைக் கொண்டு மேற்படி கோவில் நிலம் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கையின் மூலம் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தின் எல்லைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் வசம் சுவாதீனம் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.