

சென்னை,
சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தில் தென்னை விவசாயிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-
குடும்ப அட்டைகளுக்கு கொடுக்கக்கூடிய பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுத்தால் தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையும் அதிகரிக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து ஆலோசனை மற்றும் பதிலுக்கு பின் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 2024-25-ம் ஆண்டுக்கு அங்கீகரிக்கப்பட வேண்டிய 2 லட்சம் வீடுகள் திட்டம் நிலுவையில் உள்ளன. ஈரான் - அமெரிக்க போரால் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து மாற்று ஆதாரங்கள், உள்நாட்டு உற்பத்தி திறனை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அரசின் தென்னை மேம்பாட்டு திட்டம் குறித்து தென்னை விவசாயிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மாநாட்டில் தமிழகம் மட்டுமில்லாமல், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.