

கோவை,
கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினமும் மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட மெமு ரெயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு தற்போது 12 பெட்டிகளுடன் ஓடுகிறது.
கோவை மற்றும் மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் சென்று வருகின்றனர். இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றது.
நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த புதுப்பாளையம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் அருகே நின்றிருந்த 3 மர்ம ஆசாமிகள் திடீரென்று ரெயில் மீது கற்களை தூக்கி வீசி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது இதில் ரெயிலின் என்ஜினின் முன்பக்க கண்ணாடி உடைந்து டிரைவர் (லோகோ பைலட்) டென்னி தாமஸ் கை மீது விழுந்தது.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் என்ஜின் டிரைவர் டென்னி தாமஸ் பெரியநாயக்கன்பாளையம் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தினார். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள், லோகோ பைலட் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓடும் ரெயில் என்ஜின் மீது மர்ம நபர் கள் கல் வீச்சில் ஈடுபட்ட சம்பவம் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ரெயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள் யார்? மது போதையில் கல் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.