

மதுரை,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வார விடுமுறையை முன்னிட்டு நேற்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்து கடும் சிரமத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது.
மேலும், திட்டமிட்ட நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாததால் பயணிகள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே தவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் இன்று காலை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகள் நிலையம் முன்பாக அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேவையான பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பயணிகள் சாலை மறியலை கைவிட்டு பேருந்து நிலையத்திற்குள் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பண்டிகை காலங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.