சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை - நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை

நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன.
சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை - நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை
Published on

நெல்லை,

நெல்லை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றி திரிகின்றன. பகல், இரவு என எந்நேரமும் நகர்பகுதி கடைவீதிகளில் சாவகாசமாக உலா வந்து அங்கு தேங்கிக்கிடக்கும் காய்கறி பழக்கழிவுகள், ஓட்டல்கள், மளிகை கடைகளிலிருந்து வீசப்படும் பொருட்களை தின்று வருகின்றன.

பகலில் கடைத்தெருவில் வலம் வரும் மாடுகள் வியாபாரிகளுக்கு மிகுந்த இடையூறை ஏற்படுத்துகிறது. சில மாடுகள் மக்களை முட்டித்தள்ளி காயப்படுத்துகிறது. நடுரோட்டில் மாடுகள் கூட்டமாக நின்று கொண்டும், படுத்தும்கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாடு வளர்ப்போர் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாநகராட்சி பணியாளர்களால் மாடுகள் பிடிக்கப்படும், உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நேற்று மாடு முட்டி சாலையில் விழுந்த கோர்ட்டு ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com