ரெயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

கடந்த ஆண்டில் ரெயில்கள் மீது கல் எறிந்ததாக மொத்தம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில்கள் மீது கல் எறிந்தால் கடும் நடவடிக்கை: ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
Published on

சேலம்,

சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓடும் ரெயில்கள் மீது கல் எறிவது மிகவும் அபாயகரமானது. இது பயணிகளின் பாதுகாப்பு, ரெயில்வே சொத்துகள், ரெயில் இயக்கங்களுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இத்தகைய குற்றங்கள் மீது ரெயில்வே சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி கடந்த ஆண்டில் (2025) ரெயில்கள் மீது கல் எறிந்ததாக மொத்தம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டனர். நடப்பாண்டில் இதுவரை மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாரின் விசாரணையில், ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் விளையாடும் சிறுவர்கள், விளைவுகளை புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கல் எறிதலின் அபாயங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கும்படி யாரும் நடமாடினால் பயணிகள், பொதுமக்கள் உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை, போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com