

சென்னை,
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஆய்வுப் பணிக்காக சென்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் அமைச்சர் என்று தெரியாமல் விரைவு தரிசனம் செய்ய அங்குள்ள அர்ச்சகர் ஒருவர் ரூ.4,000 கேட்டதாக வெளியான செய்தி கோவில் நிர்வாகத்தின் முகத்திரையை கிழித்துள்ளது.
கையில் பணம் இல்லை என்றால் ஆன்லைன் முறையில் கூட கொடுங்கள் என்றும் கேட்பதாக கூறப்படுவது எந்த அளவிற்கு அங்கு லஞ்சம் புரையோடிப் போயிருப்பதை காட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. கடந்த வாரம் கூட திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் லஞ்சம் மற்றும் கட்டணக் கொள்ளை குறித்து நான் பதிவு செய்திருந்த நிலையில் அதனை மெய்பிக்கும் விதமாக இன்று அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட செய்தி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
திருச்செந்தூரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல முக்கிய கோவில்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருவதை செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது கோவில்களில் பக்தர்கள் மன நிம்மதியுடன் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத் துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.