காவல் மரணங்களை கண்டுகொள்ளாத தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள்- நயினார் நகேந்திரன்

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் நிர்வாக குளறுபடிகளுக்காக, அப்பாவி மக்களின் உயிர்களை நாம் அடகு வைக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

காவல் மரணங்களை கண்டுகொள்ளாத தவெக அரசுக்கு கடும் கண்டனங்களை நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

பணியிடை நீக்கம்

ஏலக்காய் லோடு ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்து விட்டதாக மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற லாரி ஓட்டுநர், காவல் நிலைய கழிவறையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தை தொடர்ந்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

சந்தேகம் வலுக்கிறது

இந்த மரணத்தை ‘தற்கொலை’ என்று கூறி தமிழக காவல்துறையினர் மூடி மறைக்க முயன்றாலும், காவல் மரணங்களுக்கு பெயர் போன தவெக ஆட்சியில், இது மற்றுமொரு காவல் மரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

ஏற்பாடுகளும் உள்ளனவா?

காரணம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தான் தமிழக காவல் நிலையங்களின் கண்காணிப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளனவா? அல்லது புகாரளிக்க வந்த நபர், காவல் நிலைய கழிவறையிலேயே தூக்கு மாட்டி கொள்ளும் வரை காவலர்கள் என்ன உறங்கி கொண்டிருந்தார்களா? கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்டோர் அரசு காவலில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், காவலர்களின் இந்த சாக்குப்போக்கை கொஞ்சம் கூட நம்மால் நம்ப முடியவில்லை.

எனவே, லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தின் உண்மை பின்னணியை எவ்வித சமரசமுமின்றி தவெக அரசு விசாரிப்பதோடு, தமிழக காவல் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் விசாரணை கைதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த வேண்டும்! முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் நிர்வாக குளறுபடிகளுக்காக, அப்பாவி மக்களின் உயிர்களை நாம் அடகு வைக்க முடியாது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X