மாம்பழம் பறித்தபோது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு

மரத்தில் ஏறி மாம்பழம் பறித்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாம்பழம் பறித்தபோது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கொல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.

2-வது மகன் சுஷ்யந்த், குழித்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 முடித்திருந்தார். இன்னும் சில நாட்களில் பிளஸ்-2 செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுஷ்யந்த் வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் மாம்பழம் பறிக்க ஏறினார்.

அப்போது மழை பரவலாக பெய்து கொண்டிருந்தது. மாம்பழம் பறித்தபோது எதிர்பாராதவிதமாக அவர் கையில் வைத்திருந்த கம்பு மரத்தின் அருகில் சென்ற மின்கம்பியில் உரசியதாக தெரிகிறது. இதையடுத்து சுஷ்யந்தை மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

படுகாயமடைந்த சுஷ்யந்தை மீட்டு சிக்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுஷ்யந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாம்பழம் பறிக்க மரத்தில் ஏறிய பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com