டிஜிட்டல் சர்வேயில் ஈடுபட்டிருந்த மாணவி விஷ ஜந்துகள் கடித்து மருத்துவமனையில் அனுமதி - டி.டி.வி. தினகரன் கண்டனம்

சர்வே பணிகளில் முன் அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

முன் அனுபவமில்லாத கல்லூரி மாணவ, மாணவியர்களை சர்வே பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசின் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் விஷ ஜந்துகள் கடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வேளாண்மைக்கான நிலம் மற்றும் சாகுபடி பயிர் குறித்த முழுமையான விவரங்களை சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சர்வே பணிகளில் வருவாய் துறையினரை ஈடுபடுத்தாமல், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தி அவர்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

டிஜிட்டல் சர்வே பணிகளுக்கு தேவையான பெரும்பாலான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் சூழலில், அண்டை மாநிலங்கள் அந்தந்த மாநில அரசு அதிகாரிகளை பயன்படுத்தியும், பயிற்சி பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சர்வே பணிகளை செய்து வருவதாக அறியவரும் நிலையில், தமிழக அரசு மட்டுமே அரசு அதிகாரிகளை தவிர்த்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபட வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, விஷ ஜந்துகள் கடித்ததில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு வருவாய்த்துறை மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய சர்வே பணிகளில் முன் அனுபவம் இல்லாத வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com