மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு


மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
x

ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி இருந்தது. இதில் மாணவியின் பெயர், அவரது முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் அப்படியே வெளியிடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த சூழலில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழில்நுட்பக் கோளாறால் எப்.ஐ.ஆர். வெளியானதாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story