

சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக் (வயது 15). கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வை எழுதிய அவர், நண்பர்களுடன் கவரைப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்றார். பின்னர் அருகே உள்ள பன்பாக் கம் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது, சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்தநிலையில், நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அபிஷேக் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. மாணவரின் நினைவாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரது புகைப்படத்துடன் மதிப்பெண் விவரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மரியாதை செலுத்தினர். ஒருபுறம் மாணவரின் கல்விச் சாதனை பெருமையை ஏற்படுத்தியிருந்தாலும், அவரை இழந்த குடும்பத்தினர் துயரத்திலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.