நாகர்கோவிலில் வில்லுப்பாட்டு பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்

நாகர்கோவிலில் கலைத்திருவிழா போட்டியில் வில்லுப்பாட்டு பாடி மாணவர்கள் அசத்தினர். காய்கறிகளில் விதவிதமான உருவங்களையும் செய்து தனிதிறனை வெளிப்படுத்தினர்.
நாகர்கோவிலில் வில்லுப்பாட்டு பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்
Published on

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பின்பேரில் கடந்த ஆண்டு முதல் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கலைத்திருவிழா போட்டிகள் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு நடக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் கலைத்திருவிழா போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் கடந்த 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடந்தது. இதையடுத்து வட்டார அளவிலான போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

அகஸ்தீஸ்வரம் வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று முதல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியம் வரைதல், கையெழுத்துப்பாட்டி, நடனப் போட்டி, குழுநடனம், காற்று இசைக்கருவிகள் இசைத்தல், தோல் இசைக்கருவி இசைத்தல், புராதன இசைக்கருவிகள் இசைத்தல், கிராமிய நடனம், கும்மிப்பாட்டு, வில்லுப்பாட்டு, காய்கறிகளில் உருவங்கள் செய்தல் உள்ளிட்ட காட்சிக் கலைப்போட்டிகள் என 63 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 356 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிந்து, ஒருங்கிணைப்பாளர் எஸ்தர்மேரி ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் மேலும் 8 வட்டாரங்களில் இந்த போட்டிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com