

மயிலாடுதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் 52 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 53 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் 10-ம் வகுப்பில் 7ஆயிரத்து 971 மாணவ, மாணவிகளும், 12-ம் வகுப்பில் 6 ஆயிரத்து 222 மாணவ,மாணவிகளும் பொது தேர்வு எழுத உள்ளனர். இதனையொட்டி பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக வகுப்பில் பின்தங்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களிடம், கற்றல் திறனில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிய வேண்டும். தேர்வில் தோல்வி அடைவதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும். இந்தக் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். முன்னதாக காலாண்டு தேர்வில் மாணவ,மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை மாவட்ட கலெக்டர் பகுப்பாய்வு செய்தார். இக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம், முத்துக்கணியன் உள்ளிட்ட தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.