

குமரி,
குமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சோதனைச்சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சோதனை சாவடிகளில் பணியில் இருக்கும் போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு கனிமவளம் ஏற்றி வரும் லாரிகளை கேரளத்துக்கு செல்ல அனுமதிப்பதாக பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்தது.
இதையடுத்து சோதனைச் சாவடிகளை கண்காணிக்க ரகசிய போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண் காணிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மத்தம்பாலை சோதனை சாவடியில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணி யில் இருந்த போது கனிமவளம் கொண்டு வந்த லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கேரளத்துக்கு அனுமதித்ததாக புகார் எழுந்தது.
இதுபோல் ஆறுகாணி போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஏட்டு ஒருவர் செறியகொல்லா சோதனை சாவடியில் பணியில் இருந்த போது லஞ்சம் பெற்றுக்கொண்டு கனிமவள லாரியை கேரளத்துக்கு அனுப்பி வைத்ததாக புகார் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டுவையும் ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.