சுதர்சன நாச்சியப்பன் மறைவு: “காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” - மாணிக்கம் தாகூர்

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில் தெரிவித்திருப்பதாவது:-

இ.எம். சுதர்சன நாச்சியப்பன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தமது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரஸ் இணைந்து , காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். 2013 ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

இரங்கல்

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். இ.எம். சுதர்சன நாச்சியப்பன் திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதி சடங்குகள்

இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை (18.09.2026) சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com