

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமைச்சர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விழா மேடை முழுவதும் இருளில் மூழ்கியது.
எனினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் பொருட்படுத்தாமல் அமைச்சர் விஸ்வநாதன் தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என பேசிய போது அங்கு இருந்தவர்கள் கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர். இந்த சம்பவத்தால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சில இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்லூரி விழாவில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோதே மின்வெட்டு ஏற்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.