'செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை எடுக்கும்' - வழக்கறிஞர் சரவணன் பேட்டி

தீர்ப்புகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
'செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை எடுக்கும்' - வழக்கறிஞர் சரவணன் பேட்டி
Published on

சென்னை,

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த 3 நாள் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, "கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது" என்று மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "வரும் 24-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த தீர்ப்புகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதியான முடிவை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com