

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந் தேதி மிக அமைதியாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், அனைத்து ஓட்டுப்பதிவு எந்திரங்களும் அந்தந்தத் தொகுதிக்கு உட்பட்ட 62 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அறைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை 4-ந் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் மேற்கொள்ளப்பட வேண்டிய பாது காப்பு பணிகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் தலைமையில், சென்னை கோட்டையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க, வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் தமிழக காவல்துறையினர் என கூடுதல் போலீசாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
அதோடு, வாக்கு எண்ணும் மையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை இல்லாத எவரையும், எந்தக் காரணத்தைக் கொண் டும் மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. வாக்கு எண் ணிக்கை தொடங்கி, முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கும் வரை பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் எவ்விதத் தளர்வும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.