கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்

சேலம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் விற்பனையாளர் பணி இடைநீக்கம்
Published on

சேலம் மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி தலைமையில் அலுவலர்கள் நேற்று முன்தினம் வாழப்பாடி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த கடையில் அரசு நிர்ணயம் செய்த ரூ.260-க்கு பதிலாக கூடுதலாக ரூ.10 விலை வைத்து ரூ.270-க்கு மதுபானம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் மாயகண்ணனை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக மதுபானங்களுக்கு பணம் வசூலிக்க கூடாது என்றும், அவ்வாறு மதுபிரியர்களிடம் கூடுதலாக பணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com