

மதுரை,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. ரத்தம் அளித்த இளைஞர் மனஉளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்து உள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். எலி மருந்து குடித்திருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மனநல சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென ரத்த வாந்தி எடுத்த அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையின் டீன் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என அவரது தந்தை தெரிவித்து உள்ளார். இதுபற்றி போலீசில் அவர் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிற மருத்துவர்களை வைத்து நடத்த வேண்டும்.
இந்த உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதுபற்றி மருத்துவமனை டீனிடமும் அவர் மனு அளித்து உள்ளார்.