எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கு 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு - அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கு 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு - அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதலமைச்சர் பழனிசாமி உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பாஜகவின் எஸ்.வி.சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதலமைச்சர் பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையத்தில் எஸ்வி சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீசார் எஸ்.வி.சேகரிடம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசிய கொடியை அவமதித்ததற்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் அவரை கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தேசிய கொடியை அவமதித்ததற்கு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான முன் ஜாமின் வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com