தகுதி சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

பஸ் வாங்க தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தகுதி சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கதன நகரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 53). இவர் திருத்தணி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரிடமிருந்து மினி பஸ் வாங்குவதற்காக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதன்படி ரூ.30 ஆயிரத்துக்கும் குறையாமல் தகுதி (சால்வன்சி) சான்றிதழ் வாங்கி வரும்படி வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதையடுத்து துளசிராமன் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தார். பின்னர் தகுதி சான்றிதழ் கேட்டு கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ள அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் (வயது 62) என்பவரை அணுகினார். அப்பொழுது தாசில்தார் திலகம் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் தகுதி சான்றிதழ் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத துளசிராமன் இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் துளசிராமனிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அப்பொழுது துளசிராமன் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தில் இருந்த தாசில்தார் திலகம் என்பவரிடம் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் திலகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர். வேலரஸ் லஞ்சம் பெற்றதற்காக தாசில்தார் திலகம் என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com