“தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது” - புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

ஆன்மீகத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது என்றும், இங்கு பிற மொழி திணிப்புக்கு இடமில்லை என்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
“தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது” - புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி கடற்கரையில் நடக்கும் பவுர்ணமி தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. நதிகள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாசார முறை ஆகும். அது நாம் நீர்நிலைகளுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாகும்.

இத்தகைய நிகழ்வுகள் நமக்கு நினைவு கூறுவது என்னவென்றால் நீர்நிலைகளை நாம் ஆக்கிரமிக்க கூடாது. அவற்றை பாதுகாக்க வேண்டும். இதேபோன்று தமிழர்களின் பண்டைய கலாசார நிகழ்வுகள் நடக்கும்போது அது இளைய தலைமுறையினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைகள், வீரம், ஆளுமை திறன் மற்றும் அவர்களின் அறிவுக் கூர்மை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நமது கலாசாரங்களை அறிந்து அனைவரும் பின்பற்ற வேண்டும்.

தமிழர்களின் பெருமை உலகம் அறிந்தது. அவற்றை நாம் எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் ஆன்மீகமும் தமிழும் சேர்ந்துதான் மக்களை உயர்த்தும் நிலையில் இருக்க வேண்டும்.

பண்டைய காலம் முதல் இன்றளவிலும் தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது. ஆன்மீகம் இல்லாமல் தமிழ் இல்லை என்பதில் தமிழக மக்களும் நானும் மிகுந்த உறுதியாக இருக்கிறோம். சில கட்சியினர் தமிழில் இருந்து ஆன்மீகத்தை பிரிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். இது என்றும் நடக்காது.

நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அவரவர் தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொள்ள வேண்டும். தொழில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக பிற மொழிகளை கற்பது நமது எதிர்காலத்திற்கு பயன்பெறும். இதனை பிற மொழி திணிப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. இங்கு பிறமொழி திணிப்புக்கு இடமில்லை. நம்மில் பலர் தமிழ் மொழியையே முழுமையாக படிப்பதில்லை என்பது வேதனைக்குரியது. ஒரு மொழியை உயர்த்தி பிற மொழியை குறைத்து பேசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com