தமிழ் என்றால் கசப்பு; வெறுப்பு... மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்


தமிழ் என்றால் கசப்பு; வெறுப்பு... மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்
x
தினத்தந்தி 19 Jun 2025 9:03 AM IST (Updated: 19 Jun 2025 9:04 AM IST)
t-max-icont-min-icon

கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாண்டிய மன்னரின் படைகள்தான் மறுபடியும் அணிவகுத்ததோ, பட்டாளச் சிப்பாய்கள்தான் களம் புகுந்தனரோ என விழிகள் வியந்து பார்க்கின்ற வகையில் மதுரை விரகனூர் சாலையில் நேற்று திமுக மாணவரணியினர் அன்னைத் தமிழின் பெருமை காத்திடக் களமிறங்கினர். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து, திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு.

மாணவரணிச் செயலாளர் சகோதரர் இராஜீவ்காந்தியும் மாணவரணியின் துணைச் செயலாளர்களும் ஒருங்கிணைந்து, மாணவர்கள் - இளைஞர்கள் - இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 'கீழடி தமிழர் தாய்மடி' என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, திமுகவின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன்.

கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

சிந்துசமவெளி நாகரிகத்தைப் போல இங்கும் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்கு கிடைத்துள்ளன" என்று பதிவிட்டு மகிழ்ந்ததுடன், "ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்திற்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்" என்ற எச்சரிக்கையையும் கலைஞர் விடுத்திருக்கிறார்.

தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பியிருக்கிறது.

இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பாஜக அரசின் அப்பட்டமான தாக்குதல். தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பாஜக இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.

அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய பாஜக அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்த எடப்பாடி பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை 'பாரத நாகரிகம்' என்று பா.ஜ.க. மனம்குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே.

தமிழ் மொழி - பண்பாடு - தமிழர் பெருமையைப் போற்றிப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் நிற்கும் திமுக ஆட்சியில் தான் கீழடியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு, அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் இன்றைய தலைமுறையினர் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் கீழடி அருங்காட்சியகம் திகழ்கிறது.

தமிழ்ப் பண்பாட்டின் காலம் 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை கொண்டதாக இருப்பதை இரும்பின் தொன்மை என்ற பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுகள் வாயிலாக நிரூபித்துள்ளோம். வரலாற்றுப் பெருமை மிக்க அந்த ஆய்வு முடிவுகளை திராவிட மாடல் அரசு வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள்.

ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு 'டுவீட்' போடக்கூட பிரதமர் தொடங்கி பா.ஜ.க. ஆட்சியினருக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு பாஜகவினரும் தங்கள் இன - மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைக் காக்கவும், அதை நிறுவவும் வேண்டிய பெரும் பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழுணர்வுகொண்ட அதன் தோழமை சக்திகளுக்கும் மட்டுமே இருப்பதால்தான், கிளம்பிற்று காண் தமிழர் கூட்டம் என்கிற வகையில் கழக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தமிழர் நலனையும் தமிழின் பெருமையையும் காப்பதற்குக் கழகம் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் கொள்கைவழிக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், கீழடி ஆய்வறிக்கையை மத்தி பாஜக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தோழமை கட்சியினர்அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story