தமிழக சட்டமன்ற தேர்தல்: கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் குழு இன்று ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல்: கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் குழு இன்று ஆலோசனை

இந்திய தேர்தல் கமிஷனில் இருந்து துணை கமிஷனர்கள் குழு சென்னைக்கு வந்துள்ளது.
Published on

சென்னை,

தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகளை மதிப்பீடு செய்யவும், சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்வதற்கும் இந்திய தேர்தல் கமிஷனில் இருந்து துணை கமிஷனர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஆய்வுப் பணியை முடித்துள்ள அவர்கள் தமிழகத்தில் 2 நாட்கள் ஆய்வுக் கூட் டத்தை நடத்துகின்றனர்.

அதன்படி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று துணை தேர்தல் கமிஷனர்கள் மானேஷ் கார்க், பானு பிரகாஷ், பவன்குமார் சர்மா, சஞ்சய்குமார், ஆசிஷ் கோயல் உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுக்கூட்டத்தை மேற்கொண்டனர். முதலில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழகத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், அஞ்சல், சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறையின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் தேர்தல் முன்னேற்பாடுகள், ஆயத்த பணிகள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) இந்தக்குழு ஆலோசனை மேற்கொள்கிறது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், கலவரம் ஏற்படக்கூடிய வாக்குச் சாவடிகள், அங்கு மேற்கொள்ள இருக்கும் தடுப்பு நடவடிக்கைகள், வாக்குச்சாவடி முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்புப் பணிகள்,

அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு வசதிகள், கட்டுப்பாட்டு அறை அமைத்தல், வாக்காளர்களுக்கு தேவையான கழிவறை, குடிநீர் வசதிகள், வயதான மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வசதியாக செய்யப்பட வேண்டிய சாய்தளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று ஆலோசனைக்கூட்டம் முடிவுற்றதும் மாலையில் துணை கமிஷனர்கள் குழு டெல்லி செல்வதாக தெரிகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி இந்தக் குழு அறிக்கை அளித்த பிறகு தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிக ளையும் அழைத்து பேசுவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com