தமிழக பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
தமிழக பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி தாக்கல் - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
Published on

சென்னை,

முதல் சட்டசபை கூட்டம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்

அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

5-ந்தேதி பட்ஜெட் தாக்கல்

இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் ஆகஸ்டு 5-ந் தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மானியக் கோரிக்கை விவாதம்

முதல் நாளில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பட்டியலிட்டு பேசுவார். அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.

முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா?

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை பெண்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். என்றாலும், த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் முத்தான பட்ஜெட்டாக இருக்குமா? என்பது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தெரியவரும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com