

சென்னை,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
2026-27ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். பட்ஜெட் தொடர்பாக கடந்த ஜூலை மாதத்தில், அரசின் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
பின்னர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், துறை ரீதியாக தவெக அறிவித்துள்ள வாக்குறுதிகள் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்கள் தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.
அதன் பின்னர் அதுபற்றி ஆய்வு மேற்கொண்டும், தமிழக அரசின் நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டில் அறிவிப்பதற்கான முக்கிய திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.
அதில் ஒரு சிறப்பம்சமாக, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட தேர்தலுக்கு முன்பு தவெக தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன? புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசிய விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதேவேளை உதயநிதியின் கைதை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்களை எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தை திமுக புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்தவுடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவெ டுத்து அறிவிக்கப்படும். தமிழக சட்டசபையில் நாளை (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரபப்பட உள்ளது. tamilnaduassembly என்ற யூடியூப் பக்கத்தில் பட்ஜெட் நேரலையில் ஒளிபரபப்பாக உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தொடரும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.