தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்


தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
x
தினத்தந்தி 24 March 2025 12:42 PM IST (Updated: 24 March 2025 1:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார்.

இந்த நிலையில், நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, "தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை விட ரூ.16 கோடி அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி வரையான காலத்தில் அபராதமாக மட்டும் ரூ.60 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ்நேர சென்சார் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதேபோல, பூண்டி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிவின் அளவு ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. பேபி அணையை வலுப்படுத்த 15 மரங்களை அகற்ற வேண்டிய சூழல் உள்ளது; அதற்கான உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுத்த போதிலும் கேரள அரசு ஒத்துழைக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story