ஷாக் அடிக்கும் விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்வது தான் தவெக அரசின் நிர்வாகத் திறமையா? - வானதி சீனிவாசன்

கூடுதல் செலவு எதிர்காலத்தில் மின்கட்டண உயர்வாக பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அபாயம் உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் எவ்வளவு மின்சாரம், எந்த நிறுவனத்திடமிருந்து, எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மின்வெட்டைச் சரிசெய்வார்கள் என்று பார்த்தால் ஷாக் அடிக்கும் விலையில் கொள்முதல் செய்வது தான் தவெக அரசின் நிர்வாகத் திறமையா? தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நிலவி வரும் மின்வெட்டைப் போக்குவதற்காக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்வதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

மின்வெட்டு என்பது இன்று நேற்றல்ல, தவெக அரசு பதவியேற்ற நாள்முதலே இப்பிரச்சினை இருந்து வருகிறது. அப்படியிருக்கையில் மின்சாரத் தேவையை முன்கூட்டியே கணித்து, குறைந்த விலையில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய தவெக அரசோ, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் கடைசி நேரத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மின்வாரியத்தின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது.

அதிக விலையிலான மின்கொள்முதலால் ஏற்கனவே கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும், மின்வாரியத்தின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும். மேலும் இந்தக் கூடுதல் செலவு எதிர்காலத்தில் மின்கட்டண உயர்வாக பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமன்றி சிறு, குறு தொழில்கள், ஜவுளித் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.

இவ்வாறு அரசின் தவறான மின்சாரத் திட்டமிடலுக்கான விலையை மக்களின் வரிப்பணத்திலிருந்து செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் எவ்வளவு மின்சாரம், எந்த நிறுவனத்திடமிருந்து, எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மக்கள் மீது மேலும் மின்கட்டணச் சுமையை ஏற்றாமல், நீண்டகால மின்சாரத் தேவைக்காக இயங்காமல் உள்ள அனல்மின் நிலையங்கள், நீர்மின்நிலையங்களின் அலகுகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.

வளர்ச்சியோடு இணைந்த தீர்வுதான் வேண்டும்.. வெறுமனே கடனை ஏற்றிச் செல்வதில் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com