

சென்னை,
உலக அளவில் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை சந்தைப்படுத்த நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், கோ-ஆப்டெக்ஸின் புதிய ஆடை வடிவமைப்புகள் மற்றும் நவீன கைத்தறி இரகங்களை உருவாக்கவும், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், பிரான்சைஸ் மாடல் விற்பனை நிலையங்கள் மற்றும்பல பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் சந்தைப்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை.
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி 01.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த கைத்தறி ஆதரவு திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸில் புதிய ஆடை வடிவமைப்புகள் மற்றும் நவீன கைத்தறி இரகங்கள் உருவாக்குதல்:
இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், கோ-ஆப்டெக்ஸில் புதிய ஆடை வடிவமைப்புகள் மற்றும் நவீன கைத்தறி இரகங்கள் உருவாக்கப்பட்டு, சந்தை விரிவாக்கம் மற்றும் மேம்பட்ட சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல்:
கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களின் தொழில்முறை, விற்பனை மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் வகையில், ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
பிரான்சைஸ் மாடல் விற்பனை நிலையங்கள் மற்றும் பல பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்கள் உருவாக்குதல்:
சந்தை வரம்பை விரிவுபடுத்தும் வகையில்,பிரான்சைஸ் மாடல் விற்பனை நிலையங்கள் மற்றும் பல பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்படும்.
மேற்படி வெளியிடப்பட்ட அரசாணைகளின்படி கோ-ஆப்டெக்ஸில் புதிய ஆடை வடிவமைப்புகள், நவீன கைத்தறி இரகங்கள் உருவாக்குதல், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் மற்றும் பிரான்சைஸ் மாடல் விற்பனை நிலையங்கள், பல பிராண்ட் - சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸின் சந்தை வரம்பை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தப்படுவதால் கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் உலகளவில் வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைவதுடன் கைத்தறித் தயாரிப்புகளுக்கான சந்தை விரிவடைந்து நெசவாளர்களின் உற்பத்தி, விற்பனை, வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரித்து கோ-ஆப்டெக்ஸின் மதிப்பு தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் வலுப்பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.